2,340 உதவி பேராசிரியர் பணிக்கு 4-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,340 உதவி பேராசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 24-ந்தேதி மாலை 5 மணி ஆகும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். 55 சதவீத தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் பெற்று, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300-ம், இதர பிரிவினர் ரூ.600-ம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையிலேயே செலுத்த வேண்டும். வங்கி வரைவோலை, மணியார்டர் மூலம் அனுப்பப்படும் கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment