வார்னிஷ் செய்யப்பட்ட ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம் 

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2018-19 நிதி ஆண்டில் குறைந்திருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதற்காக வார்னிஷ் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்போவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முதற்கட்ட முயற்சியாக வார்னிஷ் செய்யப்பட்ட 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதி ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் 2018-19 நிதி ஆண்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது. கடந்த 2017-18 நிதி ஆண்டில் 3,363 மில்லியன் அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கை 2018-19 நிதி ஆண்டில் 3,291 மில்லியனாக குறைந்து உள்ளது. பண மதிப்பு அடிப்படையில் ரூ.14,400 கோடி அளவிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கான தெளிவான காரணத்தை ஆர்பிஐ தெரிவிக்கவில்லை. அதேபோல் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2018-19 நிதி ஆண்டில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. 2017-18 நிதி ஆண்டில் 15,518 மில்லியனாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2018-19 நிதி ஆண்டில் 21,518 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2018-19 நிதி ஆண்டில் அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருந்துள்ளன. 2017-18 நிதி ஆண்டில் 500 ரூபாய் நோட்டுகள் 43 சதவீத அளவில் புழக்கத்தில் இருந்தன. 2018-19 நிதி ஆண்டில் அது 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2018-19 நிதி ஆண்டில் மொத்தமாக புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து ரூ.21.1 லட்சம் கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment