உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, July 9, 2019

பரிசு பொருட்கள் பெற்ற வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பரிசு பொருட்கள் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வகித்தபோது, தனது பிறந்தநாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள் பெற்றதாகவும், அவற்றை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்தபோது, ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மரணம் அடைந்தனர். இதையடுத்து கடந்த 2017-ல் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு எதிரான விசாரணை கைவிடப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இருப்பினும் இதில் தொடர்புடைய அமைச்சர் செங்கோட்டையன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது. 1996-ல் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்பு 2006-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் மிக அதிகமாக காலதாமதம் உள்ளது என்பதை காண முடிகிறது. மேலும் சென்னை ஐகோர்ட்டு, முதல் தகவல் அறிக்கை காலதாமதமாக பதியப்பட்டது என்றும் விசாரணை தாமதிக்கப்பட்டது என்றும் கூறி சி.பி.ஐ மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. எனவே இந்த கால தாமதத்தை எதிர்மனுதாரர்களுக்கு சாதகமாக அளித்து வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’‘ என உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் அமைச்சர் செங்கோட்டையனும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment