உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, July 8, 2019

மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,650 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வசதி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,650 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை மற்றும் கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர் கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளை புதிதாக கட்டுதல், 1,475 மாணவர் கழிப்பறைகளையும், 1,849 மாணவியர் கழிப்பறைகளையும் பழுது பார்த்தல், 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 132 பள்ளிகளுக்கு 4,493 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் எழுப்புதல், 1,649 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென கைப்பிடியுடன் கூடிய 5,726 சாய்வு தளங்கள் அமைத்தல் மற்றும் 156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை பழுது பார்த்தல் ஆகிய பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் கலைத் திட்டத்தின்படி 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் 2019-2020-ம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கென அரசால் தயாரிக்கப்பட்டு உள்ளது. பாடப்பொருள் சார்ந்த கூடுதல் தகவல்கள், மாணவர் செயல்பாடுகள், படங்கள், மதிப்பீடு மற்றும் தகவல் தொழில்நுட்ப பகுதிகள் போன்றவை உள்ளடு செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட பாட புத்தகங்களாக இப்புத்தகங்கள் விளங்குகின்றன.

இப்புத்தகங்களை ஆசிரியர்கள், சீரிய முறையில் பயன்படுத்தவும், அதன் மூலம் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திடவும், கற்றல் விளைவுகளை ஆய்வு செய்து, கற்றலில் உள்ள கடினமான பகுதிகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்திட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவி புரியும் வகையில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

கண்காணிப்பு கேமரா

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2,650 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும். இத்திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள், மாணவியர்களின் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்கு பதிலாக, 2020-2021-ம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

கட்டிடங்கள்

மின் ஆளுமை, கல்வி சீர் திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்ககத்திற்கான நிர்வாக கட்டிடத்துடன், சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான அலுவலக கட்டிடமும் சேர்த்து 3,534 சதுர மீட்டர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரி ஆகியவற்றை முன்மாதிரி கல்லூரிகளாக மேம்படுத்தி, அதில் புதிதாக இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் தோற்றுவித்தல், புதிதாக வகுப்பறைகள் கட்டுதல், இருக்கும் வகுப்பறைகளை புதுப்பித்தல், புதிய ஆய்வுக்கூடம் கட்டுதல், ஆய்வுக்கூடத்தை புதுப்பித்தல், கணினி மயமாக்கப்பட்ட நவீன நூலகம் அமைத்தல், புதிய கருத்தரங்கம் கட்டுதல் மற்றும் வளாக மேம்பாடு ஆகிய பணிகள் தலா 4 கோடி ரூபாய் வீதம் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

கல்லூரி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 98 அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 92 அரசு கல்லூரிகள் சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்த 92 அரசு கல்லூரிகளுக்கு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு மானியமாக ஆண்டொன்றிற்கு 58 கோடி ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு 116 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணாக்கர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சூழல்கள் வெகுவாக மேம்படுத்தப்படும்.

ரூ.20 கோடி மதிப்பில்...

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 10 வகுப்பறை கட்டிடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் பொது கருவிமயமாக்கல் ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் மற்றும் கல்விசார் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஒரு மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்கலைக்கழக அறிவியல் கருவிமயமாக்கல் மையம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment