ரேஷன் கடையில் இயங்கிய பள்ளி வகுப்பறை!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்திருந்ததால், கல்வி ஆண்டின் முதல்நாளான திங்கள்கிழமை ரேஷன் கடை வளாகத்தையே வகுப்பறையாக மாற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி, கருவிழிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 5ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் இரு ஆசிரியைகள் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு, நிகழ் கல்வியாண்டின் முதல்நாளான திங்கள்கிழமை வழக்கம்போல் இப்பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள், பள்ளிக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்து, சுவரில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில், கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை வளாகத்துக்கு அழைத்து சென்று, அங்கு உட்கார வைத்து பாடம் நடத்த தொடங்கினர். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன் திரண்டு வந்து கண்டன முழக்கமிட்டனர். ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) ஜெ.ராஜா கூறியது: அண்மையில் (ஜூன்1) பணி பொறுப்பேற்ற எனக்கு இதுகுறித்த தகவல் காலதாமதமாகவே கிடைத்தது. இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலின்போது இப்பள்ளி கட்டடம் சேதமடைந்த நிலையில், அப்போதே கல்வித் துறை அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு நடத்தி, புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தேர்தல்விதிகள் காரணமாகவே, புதிய கட்டடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு செய்து, கட்டடம் மிகவும் மோசமாக இருந்தால் உடனடியாக புதிய கட்டடம் கட்டப்படும் என்றார்

No comments:

Post a Comment