செமஸ்டர் தேர்வு முறைகேடு பேராசிரியர்கள் பணி நீக்கமா? உயர்கல்வித்துறை செயலாளர் பதில்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்தது. இந்த விவகாரத்தில் அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட பேராசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், 2017-ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சிறப்பு அரியர் தேர்வுகளில் விடைத்தாள் முறைகேடு நடந்தது என்று வந்த புகாரின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேராசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது பணி இடைநீக்கம் மட்டும் தான் நடவடிக்கையா? வேறு எதுவும் நடவடிக்கை இருக்குமா? என்று உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‘முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் முதற்கட்டமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதான முறைகேட்டின் உண்மை தன்மையை பொறுத்து பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு தான் அந்த நடவடிக்கையை எடுக்க முடியும்’ என்றார்.

No comments:

Post a Comment