அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ‘டீன் பேனல்’ உருவாக்குவதில் அரசியல் தகுதியானவர்களை தட்டிக்கழிப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் மீது புகார்

டீன் பேனலில் தகுதியான சீனியர் பேராசிரியர்கள் இருந்தும், அவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களில் நியமிக்காமல் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தட்டிக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ பணியிடங்களை நிரப்ப, ஒவ்வொரு ஆண்டும் டீன் பேனல் உருவாக்கப்படும். இந்த பேனலில் குறைந்தபட்சம் 12 முதல் 15 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் இடம்பெறுவோர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து இருப்பதோடு ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இந்த விதிமுறையால் டீன் பேனலில் பெரும்பாலும் 6 மாதங்களில் இருந்து ஓராண்டுக்குள் ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் பேராசிரியர்களே இடம்பெறுவர். கடந்த ஆண்டு 12 பேர் கொண்ட டீன் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் உள்ளவர்களில் 10 பேர் பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் மட்டும் டீன் பதவி உயர்வுக்காக தற்போது வரை காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம், கோவை ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி டீன் சுவாமிநாதன் ஆகியோர் ஓய்வுபெற்றனர். ஏற்கெனவே கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி டீன் பணியிடம் காலியாக உள்ளது. 3 பணியிடங்கள் காலியாக இருந்தபோதிலும், அதில் பேனலில் உள்ள 2 பேரை நியமிக்காமல் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தட்டிக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக சிபாரிசு அடிப்படையில்தான் டீன் பணியிட நியமனம் நடைபெறுகிறது. ‘டீன்’ பேனலில் இடம் பெற்றிருந்தாலும், மருத்துவக் கல்வி இயக்குநரகம் அவர்களை நியமிக்கக் கூடாது என முடிவு எடுத்தால், சம்பந்தப்பட்ட காலி பதவியிடங்களில் தங்களுக்கு விருப்பமான பேராசிரியர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொறுப்பு ‘டீன்’களாக நியமித்து காலத்தை கடத்துகின்றனர். அதனால், ‘டீன்’ பேனலில் சீனியாரிட்டி அடிப்படையில் முன்வரிசையில் இருந்தாலும் மூத்த பேராசிரியர்கள் ‘டீன்’ ஆவதற்கு வாய்ப்பே இல்லாமல் ஓய்வுபெறும் பரிதாபம் ஏற்படுகிறது. தற்போது மீண்டும் இந்த ஆண்டுக்கான ‘டீன்’ பேனல் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சீனியர் பேராசிரியர்களிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விருப்பப் பட்டியல் கேட்டுள்ளது. இவர்களில் தகுதியான 13 பேரை தேர்வு செய்து, ஏற்கெனவே டீன் பணியிடம் கிடைக்காமல் காத்திருக்கும் 2 பேரையும் சேர்த்து 15 பேர் கொண்ட புதிய டீன் பேனல் தயாரிக்கப்படும். ஆனால், இந்த புதிய டீன் பேனலில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 2 பேரை விடவும் சீனியர்கள் இடம்பெற்றால், அவர்களையே மருத்துவக் கல்வி இயக்குநரகம் காலியாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு டீன் பேனலில் இடம்பெறத் தகுதியிருந்தும் அவர்கள் விருப்பமில்லாமல் அந்த பேனலுக்கு வராமல் இருந்திருப்பார்கள். அவர்கள் இந்த ஆண்டு பேனலில் இடம்பெறும் பட்சத்தில் சீனியர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கே டீனாக வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே டீன் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 2 பேருக்கு கடைசி வரை பதவி உயர்வு கிடைப்பது சிக்கல்தான் என்றனர். ‘டீன்’ பேனலில் சீனியாரிட்டி அடிப்படையில் முன்வரிசையில் இருந்தாலும் மூத்த பேராசிரியர்கள் ‘டீன்’ ஆவதற்கு வாய்ப்பே இல்லாமல் ஓய்வுபெறும் பரிதாபம் உள்ளது.

No comments:

Post a Comment