மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை ‘மாணவர்கள் நல்ல மனிதனாக வளர வழிவகுக்கும்’ சி.பி.எஸ்.இ. முன்னாள் இயக்குனர் தகவல்

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை மாணவர்கள் நல்ல மனிதனாக வளருவதற்கு வழிவகுக்கும் என சி.பி.எஸ்.இ. முன்னாள் இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் நிறை-குறைகள் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று கருத்தரங்கம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி உள்பட இயக்குனர்களும், இணை இயக்குனர்களும் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் சி.பி.எஸ்.இ. முன்னாள் இயக்குனர் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்றார். கருத்தரங்கம் முடிந்தபின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் பல சீரிய சிந்தனைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என்ற திட்டத்தை மாற்றி, புதிய கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த கல்விக்கொள்கையில் கல்வியை பொதுவாக மகிழ்வோடு கற்றுக்கொள்ள என்னென்ன சிந்தனைகள் வேண்டுமோ அவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மாணவர்கள் அவர்களின் விருப்பப்படி பாடங்களை தேர்வு செய்து படிப்பதற்கு பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைத்தவிர கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இசைக்கல்லூரி படிப்புகள் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கணக்கு, அறிவியல் மட்டுமின்றி மாணவர்கள் நல்ல மனிதனாக வளருவதற்கு என்னென்ன தேவையோ அவை அனைத்துக்கும் இதில் வழிவகுக்கப்பட்டு உள்ளது. கல்வி திட்டத்தில் இது ஒரு புதிய நோக்கு. ஆனால் இது வெறும் வரைவு திட்டம் தான். மாநில மற்றும் தேசிய அளவில் கருத்துகள் பெறப்பட்டு, புதிய கல்விக்கொள்கை எப்படி வரும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment