பிற மாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாக சேர்க்கவேண்டும் டுவிட்டர் பதிவை சில மணி நேரத்தில் நீக்கிய எடப்பாடி பழனிசாமி

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாக சேர்க்கவேண்டும் என்று நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்து போட்ட டுவிட்டர் பதிவை எடப்பாடி பழனிசாமி திடீரென நீக்கினார். மும்மொழிக் கொள்கை கஸ்தூரி ரங்கன் குழு மும்மொழிக் கொள்கையை பரிந்துரை செய்ததற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையில் திருத்தம் செய்து அறிவித்தது. அதன்படி, இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்தநிலையில் தமிழ் பாடத்தை பிற மாநிலங்களில் 3-வது மொழியாக அறிவிக்கும் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில், “தமிழை பிற மாநிலங்களில் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் மொழி பாடமாக சேர்க்கவேண்டும் என்று உங்களிடம் (நரேந்திர மோடி) வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு செய்தால் அது உலகிலேயே மிகவும் தொன்மையான மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும்” என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. கூறியதாவது:- தமிழகத்தை பொறுத்தமட்டில் 1938-ல் இருந்து இந்தி எந்த வகையிலும் நுழையக்கூடாது என்று பெரியார் காலத்தில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை அமல்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருமொழி கொள்கை தான் எங்களுடைய உறுதியான கொள்கை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா கொண்டு வந்த இருமொழி கொள்கையால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உலகம் முழுவதிற்கும் சென்று புகழ் பெற்று விளங்குகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த வரலாற்றை மறைக்கின்ற வகையில் தமிழை பிற மாநிலங்களில் பயிற்று மொழியாக கொண்டுவரவேண்டும் என்று நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவது மறைமுகமாக மும்மொழி கொள்கையை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். எனவே அண்ணா கொண்டு வந்த இருமொழி கொள்கை உங்கள் கொள்கையா? அல்லது மும்மொழி கொள்கையா? என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:- இந்தி திணிப்பு என்பதை கலாசார திணிப்பாகவே பார்க்க வேண்டும். தமிழை பிற மாநிலங்களில் 3-வது மொழியாக கொண்டு வருவோம் என்று சொல்லியிருப்பதன் மூலம், தமிழகத்தில் இந்தியை 3-வது மொழியாக ஏற்றுக்கொள்ள வாசல் திறக்கப்படுகிறது என்பது தான் பொருள். அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழை உலகம் தழுவிய அளவில் பிற தேசத்தை சார்ந்தவர்களே அங்கீகரித்து இருக்கிறார்கள். உலக பொதுமறையாம் திருக்குறளை உலகின் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து இருக்கிறார்கள். எனவே தமிழுக்கு மேலும் புகழ் சேர்க்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு அவசியம் என்று நான் கருதவில்லை. தமிழை அழித்து விடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் உள்பட நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி, நரேந்திர மோடிக்கு விடுத்த வேண்டுகோள் தற்போது விவாத பொருளாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத் தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழை பிற மாநிலங்களில் விருப்ப பாடமாக சேர்ப்பதற்கு வேண்டுகோள் விடுத்து போட்ட டுவிட்டர் பதிவை அடுத்த சில மணி நேரத்திலேயே திடீரென நீக்கினார்.

No comments:

Post a Comment