சென்னையில், வெப்பத்தின் தாக்கம் குறைய ஒரு வாரம் ஆகும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்தபாடு இல்லை. தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. அதே சமயத்தில் சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- தென் மேற்கு பருவக்காற்று அரபிக் கடல் பகுதியில் வலுவடைந்திருக்கிறது. இதனால் தெற்கு அரபிக் கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, கன்னியாகுமரி கடல் பகுதியில் மேகங்கள் அதிகரித்திருக்கிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். அந்த சமயத்தில் காற்று 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரியாக இருக்கும். சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு இந்த ஆண்டு இயல்பான அளவுக்கு மழையை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக கீரனூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாப்பிரெட்டிப்பட்டி, மதுரை, திருமங்கலத்தில் தலா 4 செ.மீ., பவானி, பெருந்துறையில் தலா 2 செ.மீ., மணப்பாறை, ஒகேனக்கல், மேலூர், சேலம், கொடுமுடி, அரூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment