புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை - எதிர்கால விளைவுகள்....


 1. பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற‌ அடிப்படையில் 3வயது முதல் 18 வயது வரை 15ஆண்டு கால பள்ளிக் கல்வியை இக் கொள்கை வரைவு முன்வைக்கிறது.
 2. தற்போது 5 வயது முடிந்த பின் முதல் வகுப்பில் இருந்துதான் முறையான பள்ளிக் கல்வி தொடங்குகிறது. இனி மூன்று வயதில் இருந்தே முறையான கல்வி தொடங்கும்.
 3. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான‌ தேர்வுகள் நடத்தப்படும்.
 4. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலை கல்வியாக கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும்.
 5. ஒன்பதாம் வகுப்பு முதற்கொண்டே தொழிற்கல்வி. எந்த தொழில் என்பதை மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
 6. தேர்வுகளை நடத்த அரசு தேர்வு வாரியம் (BOA) அல்லாமல் அரசு ஏற்புத் தந்த எந்த தனியார் வாரியமும் தேர்வுச் சான்று தரலாம்.
 7. மாநில தேர்வு வாரியமா, மத்திய தேர்வு வாரியமா அல்லது தனியார் தேர்வு வாரியமா? எது தன் மாணவர்களை மதிப்பிட்டு சான்று தர வேண்டும் என்பதை பள்ளிகளே முடிவு செய்துக் கொள்ளலாம்.
 8. பள்ளியில் 15 வருடம் பயின்று மேல்நிலைப் பள்ளி கல்வி சான்று பெற்றாலும் கல்லூரியில் சேர அது தகுதியாக கருத்த மாட்டார்கள்.
 9. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்விற்கு விண்ணப்பித்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரி சேர்க்கை நடைபெறும்.
 10. தற்போது மருத்துவக் கல்வி பயில "நீட்" போன்று பி.ஏ., பி.எஸ்.சி உட்பட எந்த படிப்பிற்கும் ஒரு தேசிய தகுதி காண் தேர்வு உண்டு.
 11. மருத்துவக் கல்வியில் நுழைய "நீட்", மருத்துவக் கல்வி முடித்த பின்பு "எக்ஸிட்" எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும்.
 12. ஆறு வயதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டும். கூடுதலாக மொழிகளை கற்பதற்கே நேரத்தை செலவழித்தால் குழந்தைகள் எவ்வாறு பிற பாடங்களை கற்க நேரம் ஒதுக்க முடியும்?
 13. பதினைந்து வருடப் பள்ளிப் படிப்பில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்று மொழி எதுவாக இருக்கும் என்ற தெளிவு இந்த வரைவில் இல்லை.
 14. அரசுப் பள்ளியில் மாணவர் குறைவு, வசதி பற்றாக்குறை இருந்தால் அத்தகைய பள்ளிகள் இணைந்து வளாக பள்ளிகளாக உருவாகும். வசதி இருப்பவர்கள் அருகிலேயே படிக்க முடியும். வசதி இல்லாமல் அரசுப் பள்ளியை நாடுபவர்கள் தொலைவில் சென்று படிக்க வேண்டும் என்பது சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.
 15. கல்வியியல் கல்லூரிகள் மூடப்பட்டு பல்கலைக்கழகங்களில் நான்கு வருட படிப்பு படித்தால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும்.
 16. ஆசிரியர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இனி கிடையாது. தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகளில் அவர்களின் திறன் வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு.
 17. பட்டங்கள் இனி பல்கலைக்கழகங்கள் தராது. கல்லூரியே தரும். அதற்கான தகுதிகளை கல்லூரி வளர்த்துக் கொள்ளவேண்டும். தவறினால் அகத்தகைய கல்லூரிகள் தனக்கு ஏற்பு தந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து விட வேண்டும். கல்லூரியாக செயல்பட்டு பட்ட கட்டிடம் அதன்பின் நூலகமாகவோ, தொழிற் பயிற்சி நிறுவனமாகவோ செயல்படலாம்.
 18. பள்ளி முதல் கல்லூரி வரை சந்தையில் போட்டிப் போட்டு தரத்தை நிருபிக்க வில்லை என்றால் மூடப்பட வேண்டும்.
 19. பல்கலைக்கழகங்கள் 1,2,3,4 என தர வரிசைப் படுத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களாக செயல்படும்.
 20. தனியார்- அரசு என்ற பாகுபாடு இருக்காது.
 21. அன்னிய பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்படும்.
 22. தமிழ் நாடு அரசு பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
 23. மான்யம், கல்வி உதவி (Grant/Scholarship) சமூக/கல்வி பின்தங்கலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் இருப்பதற்கான உத்திரவாதம் கிடையாது. தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே உதவிகள் இருக்கும்.
 24. சமஸ்கிருதம் கற்றலுக்கு கூடுதல் முக்கியத்துவம். பிற இந்திய மொழி வளச்சிக்கு சமவாய்ப்பு கிடையாது.
 25. இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள மாநில அரசு உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கல்வி முழுமையாக செல்லும் கூறுகள் நிறைந்துள்ளன. பிரதமர் தலைமையில் அமைந்த தேசிய கல்வி ஆணையமே முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக இருக்கும்.

No comments:

Post a Comment