கோடை விடுமுறை முடிந்தது  தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு  முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் 50 நாள் கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ஏப்ரலில் முடிவடைந்தன. அதன்பின்னர் மாணவர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து 50 நாட்கள் விடுப்பு முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று (ஜூன் 3) திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டு முதல் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகமாகிறது. இதனால், முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடை, நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. புத்தக பை ஜூன் 7-ம் தேதி வழங்கப்படும். தொடர்ந்து மடிக்கணினி, காலணி உட்பட இதர இலவச பொருட்கள் கொள்முதலுக்கான டெண்டர் ஒதுக்கீடு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அச்சடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பெரும் பாலான கிராமப்புற அரசுப் பள்ளி களுக்கு இன்னும் பாடநூல்கள் முழுமையாக வழங்கப்பட வில்லை. இதுகுறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment