அரசு ஊழியர்கள் வேட்டி உள்ளிட்ட தமிழ் கலாச்சார உடைகளை அணியலாம் விதிகளை மீண்டும் திருத்தியது தமிழக அரசு

தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், வேட்டி உள்ளிட்ட தமிழ் கலாச்சார உடைகளையும் அணியலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் நல்லொழுக்கம் பாதிக்காத வகையில் பணியிடத்துக்கு ஏற்ற வகையில் சுத்தமான, முறையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். குறிப்பாக, பெண் ஊழியர்கள் புடவை அல்லது சல்வார் கமீஸ், சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணிக்கு வர வேண்டும். ஆண்கள் சட்டை, பேன்ட் அணிந்து வரவேண்டும், நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நீதித்துறை சார்ந்த மன்றங்களில் ஆஜராக வேண்டியிருந்தால் முழு கை சட்டை, முழு கையுடன் கூடிய கோட், திறந்த வகையிலான கோட்டை அணிய விரும்பினால் கண்டிப்பாக ‘டை’ அணிய வேண்டும் என்று பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் பணியாளர்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த மே.25-ம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விதிகளில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அரசு ஆண் ஊழியர்கள் சட்டை, பேன்ட் அல்லது தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்தியப் பாரம்பரிய ஆடையான வேட்டியும் அணிந்து வரலாம். ஆனால், டீ-சர்ட் போன்ற கேஷுவல் ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment