தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குகிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை நாளை (சனிக்கிழமை) கேரளாவில் தொடங்குகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு அதிகளவு மழைப்பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் ஓரளவு மழை இருக்கும். அந்த மழையாவது பெய்யாதா? என்ற ஏக்கத்தில் அனைவரும் இருக்கின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அல்லது ஜூன் 5-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். ஆனால் இந்த முறை பருவமழை தொடங்குவது சற்று தள்ளிப்போய் இருக்கிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை 8-ந்தேதி (நாளை) தொடங்குகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காற்றின் வேகம் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 8-ந்தேதியில் இருந்து மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும். தமிழகத்தில் தென்மேற்கு காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் வீசும். அந்த காற்று வீசும்போது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும். பொதுவாக தென்மேற்கு பருவமழை இந்தியாவில் குறையும்போது, தமிழகத்தில் நல்ல மழை இருக்கும். அந்தவகையில் இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இந்தியாவில் குறைவாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. அதனால் தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தென் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், வத்திராயிருப்பு, கொடைக்கானலில் தலா 7 செ.மீ., கடவூரில் 6 செ.மீ., திருப்பூர், உசிலம்பட்டி, புல்லம்பாடி, வால்பாறையில் தலா 5 செ.மீ., உடுமலைப்பேட்டை, சிவகாசி, கே.பரமத்தி, நடுவட்டம், வெண்பாவூரில் தலா 4 செ.மீ., சத்தியமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராஜபாளையம், மாயனூர், அரவக்குறிச்சியில் தலா 3 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment