கடுமையான புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியாத நிலை உள்ளதா? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடுமையான புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியாத நிலை உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சரவணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவுப்படி முதுகலை மருத்துவம் மற்றும் டிப்ளமோ படிப்புக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில், டிப்ளமோ படிக்க ரூ.20 லட்சம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரருக்கு இணையான அல்லது உயர்பதவி வகிக்கும் 2 அரசு ஊழியர்களிடம் ஜாமீன் உத்தரவாதம் பெறவேண்டும். முதுகலை மருத்துவம் படிக்க விண்ணப்பதாரர் 2 அரசு ஊழியர்களிடம் உத்தரவாதம் பெறுவதுடன் ரூ.40 லட்சம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பின்தங்கிய மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். எனவே இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்சமானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களின் முழுவிவரத்தையும் அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். தகுதி இருந்தும் புதிதாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியாமல் யாராவது உள்ளனரா? என்பது குறித்தும், மருத்துவ மேற்படிப்பில் தற்போதுள்ள காலியிடங்கள் குறித்த விவரத்தையும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment