மாற்றுத்திறனாளி மாணவருக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்க உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளி மாணவருக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து உரிய பதில் தெரிவிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கு 75 சதவீத பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அகில இந்திய அளவில் 285-வது இடம் பெற்று புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியுடன் இணைந்த மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த கல்லூரியில் சேருவதற்காக சென்றார். அப்போது சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழு முன்பு ஆஜராகி சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்குமாறு விபினுக்கு உத்தரவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழு விபினை பரிசோதித்து அவர் 90 சதவீத பார்வை திறன் குறைபாடு உள்ளவர் என சான்றிதழ் வழங்கியது. பின்னர் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி 40 சதவீதத்துக்கு மேல் பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவ சீட் வழங்க முடியாது என்று கூறி விபினுக்கு எம்.பி.பி.எஸ். சீட் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தனி நீதிபதி, மாற்றுத்திறன் மாணவருக்கு மருத்துவம் படிப்பதற்கான இடம் கொடுக்க மறுப்பது மாற்றுத்திறனாளிகள் சட்டத்துக்கு எதிரானது. எனவே மனுதாரருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் வழங்க வேண்டும். அந்த சீட் நிரப்பப்பட்டு இருந்தால் வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளில் சீட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று, கோர்ட்டு அவமதிப்பு மனுவை விபின் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இதுகுறித்து அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment