மக்களின் கருத்து அறிய வரைவு அறிக்கை வெளியீடு: கல்வி நிறுவனங்களில் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது மத்திய அரசு விளக்கம்

மக்களின் கருத்து அறிய வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகவும், கல்வி நிறுவனங்களில் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தி திணிப்பு குற்றச்சாட்டு புதிய தேசிய கல்வி கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் கடந்த 31-ந் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜூன் 30-ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் டாக்டர் கஸ்தூரி ரங்கன் மற்றும் அவருடைய குழு உறுப்பினர்கள் கடந்த 31-ந் தேதி அளித்தனர். அதுதொடர்பாக பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது. எந்த மொழியும் திணிக்கப்படாது 1. இது நிபுணர் குழு சமர்ப்பித்த வரைவு அறிக்கை. பொதுமக்களின் கருத்துகளை அறிய முன்வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, மத்திய அரசு அறிவித்த கொள்கை அல்ல. பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை நடத்திய பின்னர், தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு இறுதி செய்யும். 2. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அனைத்து இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உறுதி பூண்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது. எந்த மொழிக்கு எதிராகவும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமனும், எஸ். ஜெய்சங்கரும் டுவிட்டரில் தமிழில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில், “மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்” என்று கூறி உள்ளார். எஸ். ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில், “மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக் கும். எந்த மொழியையும், யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.” என்று கூறி இருக்கிறார்.

No comments:

Post a Comment