மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடம் ஆய்வில் வெளியான தகவல்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் தகவல் நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகளில் தேர்வில் தோல்வி மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக பல மாணவ-மாணவிகள் பாதியிலேயே பள்ளி கல்வியை தொடராமல் நின்றுவிடுகின்றனர். இதுதொடர்பான ஆய்வை கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (யு-டி.ஐ.எஸ்.இ.) நடத்தியது. இதில் பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடக்கப்பள்ளி, இடைநிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்ற 3 பிரிவுகளில் தலா 100 மாணவ-மாணவிகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி இடைநிற்றல் தற்போது வெளியாகி உள்ள இந்த ஆய்வு முடிவில், மாணவ-மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வில் வெளியான முக்கிய அம்சங்கள் வருமாறு:- இந்திய அளவில் தொடக்கப்பள்ளி கல்வியை 100 மாணவ-மாணவிகளில் 94 பேரும், இடைநிலை பள்ளி கல்வியை 75 பேரும், மேல்நிலைப்பள்ளி கல்வியை 70 பேரும் நிறைவு செய்கின்றனர். சமுதாய ரீதியாக எஸ்.டி. பிரிவினரில் 100 மாணவர்களில் 61 பேர் முழுமையாக பள்ளி படிப்பை நிறைவு செய்கின்றனர். எஸ்.சி. பிரிவினர் 65 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 73 பேரும், பொதுப்பிரிவினர் 74 பேரும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றனர். ஆண், பெண் விகிதாச்சார அடிப்படையில் இருவருமே சமமாக 70 பேர் முழுமையாக பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர். தமிழகம் முதல் இடம் மாநிலங்களின் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதாவது, தமிழகத்தில் 86.2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் (85.8 சதவீதம்) 2-வது இடத்தையும், கேரளா மற்றும் மராட்டியம் (85.6 சதவீதம்) 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment