குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துங்கள் - கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் பேச்சு -

வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், நம் வீடுகளிலுள்ள குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு எனும் நல்ல பழக்கத்தை இளவயதிலேயே பழக்கப்படுத்துங்கள் என்று கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் சி.சங்கர் குறிப்பிட்டார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம், உலக இரத்ததான தினம், போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கான சர்வதேச எதிர்ப்பு தினம் ஆகிய முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்ற கரூர் வைஸ்யா வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் சி.சங்கர் பேசும்போது, "நான் உடுமலை அருகேயுள்ள ஜல்லிப்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தவன். எங்கள் கிராமத்திலிருக்கிற நூலகத்திற்கு தினமும் தவறாமல் செல்வேன். அங்குதான் பேப்பர் படிப்பேன். அங்கிருந்த பேப்பரில் வந்த அறிவிப்பை பார்த்துதான் நான் வங்கிப் பணித் தேர்விற்கு அப்ளிகேஷன் போட்டேன். இன்றைக்கு ஒரு வங்கியின் கிளை மேலாளராக இருக்கிறேன் என்றால் அதற்கு நூலகம்தான் முதல் காரணம். நூலகத்தை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் நிச்சயம் உயரத்தை நம்மால் அடைய முடியும். நம் வீடுகளின் அருகேயுள்ள நூலகங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு அவ்வப்போது நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது, செல்பேசியில் வீடியோ கேம்களைப் பார்ப்பது போன்ற நேர விரயம் செய்யும் செயல்களைத் தவிர்த்து புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவார்கள். நம் வீடுகளிலுள்ள குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு எனும் நல்ல பழக்கத்தை இளவயதிலேயே பழக்கப்படுத்துங்கள். சிறந்த சிந்தனையுள்ள உயர்ந்த மனிதர்களாக நம் குழந்தைகள் வளர்வார்கள். நூலகம் ஒரு பூந்தோட்டம் போன்றது. அதன் மணத்தை நாம் அனவரும் நுகர்ந்து பயன்பெற வேண்டும்" என்றார். தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் குப்பன், கவிஞர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர் பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். படக்குறிப்பு : வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வந்தவாசி கரூர் வைஸ்யா வங்கியின் கிளை மேலாளருக்கு சி.சங்கர் தொழிலதிபர் இரா.சிவக்குமார் நினைவுப் பரிசு வழங்கும்போது பேசும்போது எடுத்த படம். ருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ், , கிளை நல்நூலகர் பூ.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment