பள்ளியில் கல்வியை தொடர முடியாதவர்களுக்கு வாய்ப்பு: புதிய கல்வித் திட்டம் உருவாக்கம்

இளம் வயதில் பள்ளியில் படிக்க இயலாதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் வழியாக, 10 மற்றும், 12ம் வகுப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெறுவதற்கு மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரு கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் ஏற்பட்டவர்கள், இளம் வயதில் பள்ளியில் படிக்க இயலாத ஆண்கள் மற்றும் பெண்கள், தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் படித்து தேர்ச்சி பெறவும், பள்ளி பாடங்களுடன் தொழிற்கல்வி பயிலவும் முடியும். மிக குறைவான சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களோடு முந்தைய கல்வி முறையில் பெற்ற இரண்டு பாடங்களில் மதிப்பெண்கள் அல்லது ஐ.டி.ஐ., யில் தேர்ச்சி பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்களை உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் இக்கல்வித் திட்டத்தில் உள்ளது.அடிப்படைக் கல்வியை பெற இயலாதவர்கள் பயனடையும் வகையில், இத்திட்டம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, உச்ச வயது வரம்பு கிடையாது. 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.விருப்பமான, ஐந்து பாடங்களை தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எளிதாக அடிப்படை கல்வியை பயில இயலும்.மேலும், கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களை கடினமாக நினைக்கும் மாணவர்கள் அந்த நிலையை மாற்றி, அவரவர் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு பிடித்த வேறு ஏதேனும், ஐந்து பாடங்களை படிக்க இயலும்.இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால், பட்டப்படிப்பு, பட்ட மேற் படிப்பு மற்றும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெற முடியும்.இக்கல்வி திட்டத்தை மாவட்டத்திற்கு குறைந்தது, ஐந்து பள்ளிகளில் முனைப்புடன் செயல்படுத்த சிறுபான்மையினர் நல இயக்ககம் முயற்சி எடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு என்பது அடிப்படை கல்வித் தகுதியாக இருப்பதால் வேலைவாய்ப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் இது பயனுள்ளதாக அமையும்.மேலும், இக்கல்வி முறையை பற்றி தெரிந்தவர்கள், மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.விண்ணப்படிவம் மற்றும் இதர விவரங்களை www.nios.ac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.கூடுதல் விவரங் களுக்கு, சென்னை தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவன மண்டல இயக்குனர் அலுவலகத்தை, 044-28442239 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment