சென்னையில் 60 சதவீத ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பாதிப்பு மதிய உணவை நிறுத்த முடிவு

சென்னையில் 60 சதவீத ஓட்டல்களில் தண்ணீர் இல்லாததால் மதிய உணவு விற்பனையை நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக் கின்றனர். அதன் தாக்கம் தற்போது சென்னையில் உள்ள ஓட்டல் கடைகளிலும் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் சிறு கடைகள் மூலம் 5 நட்சத்திர ஓட்டல்கள் என சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஓட்டல்கள் இருக்கின்றன. இந்த ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 60 சதவீதம் ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது:- ஓட்டல்களில் மதிய உணவு தயாரிப்பதற்கு தான் தண்ணீர் செலவு அதிகம் ஆகிறது. குறிப்பாக மதிய உணவுக்கு தேவையான அரிசி கழுவுவதற்கும், காய்கறி கூட்டு வைக்க காய்கறிகளை கழுவுவதற்கும், அதை சமைப்பதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. பின்னர், அதை சமைக்க பயன்படுத்திய பாத்திரங்களை கழுவுவதற்கும் நீர் வேண்டும். இப்போது ஏற்பட்டு இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால், இதை சமாளிக்க எங்களால் முடியவில்லை. நிலத்தடி நீர் இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. குடிநீர் வாரியத்தில் இருந்து எப்போதும் ஓட்டல்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. தனியார் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை நம்பி தான் இருக்கிறோம். அந்த தண்ணீர் லாரிகளும், சென்னை சுற்றியுள்ள சில பகுதிகளில் தண்ணீர் எடுக்க ஐகோர்ட்டு தடை விதித்து விட்டது. இதனால் அந்த தண்ணீர் லாரிகளும் சரியான நேரத்தில் நீரை வழங்குவது இல்லை. இதனால் சமையலும் பாதிக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மனக்கசப்பும் ஏற்படுகிறது. இதனால் மதிய உணவு நிறுத்துவது தொடர்பாக பல கடைகள் ஆலோசித்து வருகின்றன. என்னுடைய 2 கடைகளில் மதிய உணவை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறேன். சென்னையில் மட்டும் சிறிய கடைகள் முதல் 5 நட்சத்திர ஓட்டல்கள் வரை 60 சதவீத ஓட்டல் கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளன. இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. லாரி தண்ணீரை நம்பி மட்டும் தான் எங்களுடைய இப்போதைய பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment