கலை அறிவியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பட்டப்படிப்புகள் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையில் பரிந்துரை

2019 புதிய கல்வி கொள் கைக்கான வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், பி.ஏ. இளங்கலை மற்றும் பி.எஸ்சி. இளம் அறிவியல் பட்டப்படிப்புகள் இனி நான்கு வருட கல்வியாக மாற வாய்ப்பு உள்ளது.

நான்கு வருட பட்டப்படிப்பு, துறை சார்ந்த அறிவை மேம்படுத்தும் என்கிறது புதிய கல்வி கொள்கை. ஆனால் பட்டப்படிப்பின் காலம் மூன்று வருடங்களா? அல்லது நான்கு வருடங்களா? என்பதை தேர்வு செய்யும் உரிமையை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அளிக்கிறது இந்த அறிக்கை. பி.எச்டி செய்ய, நான்கு ஆண்டு பட்டப்படிப்பு அல்லது முதுகலை படிப்பு அவசியம் என்றும் பரிந்துரைக்கிறது.

பல்முனை நுழைவு மற்றும் வெளியேறும் வாய்ப்புகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். மூன்று வருட பட்டப்படிப்பு, ஆராய்ச்சியுடன் கூடிய நான்கு வருட பட்டப்படிப்பு, முதல் வருட கல்விக்கு பிறகு டிப்ளமோ படிப்பு ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். பல்கலைக்கழகங்கள் பல்வேறு பட்டப்படிப்புகளின் கலவைகளை அளிக்க முடியும்: மூன்று வருட பி.ஏ., பி.எஸ்சி.யுடன் இரண்டு வருட பட்டமேற்படிப்பு, நான்கு வருட பட்டப்படிப்புடன் ஒரு வருட பட்டமேற்படிப்பு அல்லது ஒரு ஐந்து வருட ஒருங்கிணைக்கப்பட்ட படிப்பு ஆகியவற்றை அளிக்கலாம்.

பட்டப்படிப்புகளில், தாராளவாத கலைக்கல்வி அதிக அளவில் சேர்க்கப்படும். விருப்பப் பாடங்களாக இந்திய மொழிகள், இலக்கியம், இசை (செவ்வியல் மற்றும் சமகால), தத்துவம், இந்தியவியல், நிகழ்த்து கலைகள் மற்றும் விளையாட்டு கல்வி ஆகியவற்றை கல்லூரிகள் அளிக்கலாம்.

இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் தொழில் கல்வி பிரிவுகளில், தாராளவாத கலை பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. இதுவரை இந்திய கல்வி அமைப்பில், அறிவியல் பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதையும், உலக அளவில், தாராளவாத கலை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் இது குறிப்பிடுகிறது. மனித மூளையின் இடது மற்றும் வலது பகுதிகளை சமமாக வளரச் செய்வதிலும், படைப்பாற்றலையும் பகுப்பாய்வு திறனையும் சம அளவில் வளர்த்தெடுப்பதிலும் தாராளவாத கல்வியின் பங்களிப்பை பற்றி இந்த அறிக்கை கூறுகிறது.

பாடப்பிரிவுகளிடையே உள்ள கடுமையான பிரிவினைகளை முடிவுக்கு கொண்டு வந்து, நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய கலவையான பாடத்திட்டங்களை வகுக்க அறிவுறுத்துகிறது. உதாரணமாக அறிவியல் பிரிவில் இருந்து இயற்பியலையும், கலை பிரிவில் இருந்து வரலாற்றையும் சேர்ப்பது. மேலும், தாராளவாத கலை பிரிவில் ஒரு நான்கு வருட பட்டப்படிப்பையும் (பி.எல்.ஏ), தாராளவாத கல்வியியல் பிரிவில் (பி.எல்.இ) ஒரு நான்கு வருட பட்டப்படிப்பையும் அறிமுகப்படுத்தும்படி பரிந்துரை செய்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒரு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இவை கற்பிக்கப்படும்.

இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், ஏதாவது ஒரு பொதுச் சேவை நிறுவனத்தில் ஒரு செமஸ்டர் காலம் பணி புரிய வேண்டும். இதன் மூலம் அனுபவ அறிவையும், கற்ற கல்வியை செயல்முறைபடுத்தும் அறிவையும் பெற முடியும்.

உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களினால், உயர் கல்வியில் சேர்க்கை விகிதம், தற்போது உள்ள 25 சதவீதத்தில் இருந்து 2035-ம் ஆண்டிற்குள், 50 சதவீதமாக உயரும் என்று இந்த அறிக்கை கணிக்கிறது. உயர் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை இன்று 3.5 கோடியாக உள்ளது. பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், இதை இரண்டு மடங்காக உயர்த்த முடியும்.

கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அளித்தல்

தன்னாட்சி அதிகாரம் இல்லாததால், கற்பித்தல் முறைகளில், பாடத்திட்டங்களில், ஆராய்ச்சி முறைகளில் கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் புதுமையான வழிமுறைகளை செயல்படுத்த முடிவதில்லை என்கிறது இந்த அறிக்கை. இதை சீர் செய்ய, உண்மையான தன்னாட்சி அளிக்கப்பட்டு, அதன் மூலம் புதுமையான முயற்சிகள், போட்டி போடல், ஒத்துழைத்தல், உள்ளூர் நிர்வாக முறை, தரமேன்மை ஆகியவை உந்தப்படும்.

ஆசிரியர் பயிற்சி

மாறிவரும் கல்வி நிறுவன தேவைகளுக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆசிரியர்கள் சேர்க்கை மற்றும் மறு பயிற்சி முறைகளில் பெரும் மாற்றங்களை இந்த அறிக்கை முன்மொழிகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இதன் மூலம் சீரமைக்கப்படும்.

கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் புதிய உச்சங்களை எட்ட தேவையான ஊக்கம் அளிக்கப்படும். 2023-ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சி திட்டம் மட்டும் இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

பல தரப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே, ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

உயர் கல்வி நிறுவன வகைகள்

உ யர் கல்வி முறையை சீர்படுத்த, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் மூன்று வகையாக அரசு பிரிக்கும்.

முதல் வகை:

உலகத்தரமான கற்பித்தல் முறை கொண்ட ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்; இவற்றில் இளங்கலை படிப்புகள், முதுகலை, டாக்டர் பட்டப்படிப்பு, தொழில் கல்வி மற்றும் தொழில் திறன் கல்வி படிப்புகள் அளிக்கப்படும். தற்சமயம், இளங்கலை படிப்புகளை அளிக்காத ஆராய்ச்சி கல்வி நிலையங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளை தொடங்க ஊக்கம் அளிக்கப்படும்.

இரண்டாம் வகை:

கற்பிக்கும் பல்கலைக் கழகங்கள்; தரமான இளங்கலை, முதுகலை, டாக்டர் பட்டப்படிப்பு, தொழில்கல்வி, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு பங்களிப்பு ஆகியவை இருக்கும்.

மூன்றாவது வகை:

தரமான இளங்கலை, தொழில் கல்வி படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள். இவை தாராளவாத இளங்கலை படிப்புகளை கற்பிக்கும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாகவும் இருக்கலாம். கடைசி வருட மாணவர்களுக்கு ஆராய்ச்சி திட்டங்களை தேடி அளிக்க ஊக்கப்படுத்தப்படும்

இனி கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பொது, தனியார், அரசு உதவி பெறும் தனியார் என்றும் முதல் வகை, இரண்டாம் வகை, மூன்றாம் வகை என்றும் வகைப்படுத்தப்படும். ‘நிகர்நிலை பல்கலைக்கழகம்’, ‘இணைப்பு பல்கலைக்கழகம்’, ‘ஒற்றை பல்கலைக்கழகம்’ போன்ற பெயர்கள் இனி நீக்கப்படும். இனிமேல் இணைப்புகள் இருக்காது.

முதல் மற்றும் இரண்டாம் வகை நிறுவனங்கள் புதுமையான திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளை அளிக்க ஊக்கப்படுத்தப்படும். இத்தகைய படிப்புகளை மட்டுமே அளிக்கவும் செய்யலாம்.

இதர முக்கிய பரிந்துரைகள்


* பி.ஏ., பி.எஸ்சி. பாடங்கள், நான்கு வருட படிப்புகளாக கற்பிக்கப்படும்.

* தாராளவாத கலைகள் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் இடம் பெறும்.

* தாராளவாத கலை பிரிவு (பி.எல்.ஏ) மற்றும் தாராளவாத கல்வியியல் பிரிவில் (பி.எல்.இ) நான்கு வருட பட்டப்படிப்புகள் அறிமுகம்.

* பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.

* தேசிய உயர் கல்விக்கான தர நிர்ணய கட்டமைப்பை உருவாக்க ஒரு பொதுக் கல்வி நிறுவனம் (ஜி.இ.சி) அமைக்கப்படும்.

* கல்வி பாடங்களுக்கிடையே நாடு தழுவிய அளவில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த, ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கப்படும்.

* இளங்கலை பட்டப்படிப்புகளிலும் ஆராய்ச்சிகள் ஊக்கப்படுத்தப்படும்.

* பி.எச்டி செய்வதற்கான தகுதியாக ஆராய்ச்சியுடன் கூடிய நான்கு வருட பட்டப்படிப்பு அல்லது ஒரு பட்டமேற்படிப்பு இருக்கும்.

* எம்.பில் படிப்பு நிறுத்தம்.

* ஜி.இ.சி மூலம், மிகப்பெரிய திறந்தவெளி இணையக்கல்வி படிப்புகளில் (எம்.ஒ.ஒ.சி) ஈட்டப்பட்ட கிரெடிட் புள்ளிகளை அங்கீகரிக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.

* 2023-ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சி திட்டம் மட்டும் இருக்கும்.

No comments:

Post a Comment