உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

நீட் தேர்வு கேள்வித்தாள்களில் குளறுபடி: தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் ஜூலை 4-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீட் தேர்வு கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயந்த் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “நீட் தேர்வில் 1, 13, 58, 65 ஆகிய 4 கேள்விகளுக்கு தரப்பட்ட விடை வழிகாட்டியில் தவறு நேர்ந்துள்ளது. இதை சுட்டிக்காட்டி சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேசிய தேர்வு முகமைக்கு விண்ணப்பம் செய்தனர். ஆனால் மீண்டும் தவறு நேர்ந்துள்ளது. எனவே, இந்த தவறுகளை சரி செய்து இவற்றுக்கான மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை மாற்றி வெளியிட வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், ஏற்கனவே நிபுணர்கள் முறையாக ஆய்வு செய்து தவறுகளை திருத்தி புதிய விடை வழிகாட்டியின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும், எனவே அந்த முடிவை மீண்டும் மாற்ற முடியாது என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment