உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, June 3, 2019

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ரேண்டம் எண் வெளியீடு பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. பொது கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி தொடங்குகிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், உயர்க்கல்வி துறைக்கும் கடந்த சில மாதங்களாக சத்தமில்லாமல் பிரச்சினை இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தவில்லை என்று கூறியது. உயர்க்கல்வி துறையும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்த இருப்பதாக அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 494 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக் படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இந்த ஆண்டு நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ரேண்டம் எண்ணை உயர்க்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 494 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 சேர்க்கை இடங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. விண்ணப்பித்து இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் பட்சத்தில் ரேண்டம் எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கட் ஆப் மதிப்பெண் ஒரே மாதிரி இருந்தால் முதலில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணில் யார் அதிகம்? என்று பார்க்கப்படும். அதிலும் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தால், அதற்கு அடுத்தபடியாக இயற்பியலும், விருப்ப பாடமும் கணக்கில் கொள்ளப்படும். அதுவும் ஒரே மாதிரி இருந்தால், பிறந்த தேதியும், மாதமும் பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் ரேண்டம் எண் கணக்கில் எடுக்கப்படும். அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 7-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. தரவரிசை பட்டியல் வருகிற 17-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு வருகிற 20-ந் தேதியும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 21-ந் தேதியும், விளையாட்டு வீரர் பிரிவினருக்கு 22-ந் தேதியும், தொழில்முறை கல்வி சேர்க்கை பிரிவு மாணவர்களுக்கு 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும் நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக, பொது கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி தொடங்கி, 28-ந் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. பின்னர், தொழில் முறை கல்வி, பொது கலந்தாய்வுக்கான துணை கலந்தாய்வு 29-ந் தேதி நடக்கிறது. 30-ந் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. பிளஸ்-2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு இருந்தாலும், கட் ஆப் மதிப்பெண் 200 மதிப்பெண் அடிப்படையில் தான் ஒதுக்கப்படும். என்ஜினீயரிங் படித்தவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. மாணவர்கள் இதை தான் படிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்போது, அவர்களை என்ஜினீயரிங் படிக்க எப்படி கட்டாயப்படுத்த முடியும்? அது அவர்களுடைய விருப்பம். மொத்தத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ரேண்டம் எண் வெளியிட்டபோதும், பேட்டியின் போதும் உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment