தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 30 ஆயிரம் அதிகரிப்பு

தனியார் கல்லூரிகள் வசமிருந்த சுமார் 30 ஆயிரம் இடங்கள் அரசு வசம் வந்ததால், பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீடு இடங்கள் அதிகரித்துள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தருமபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது. இந்தப் பணியை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். அரசு இட ஒதுக்கீடாக பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவை தவிர, தனியார் கல்லூரிகளில் உள்ள சுமார் 30 ஆயிரம் மேலாண்மை ஒதுக்கீடு இடங்களை அரசு ஒதுக்கீடாக மாற்றிக் கொள்ளும்படி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அவற்றையும் சேர்த்தால் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 பேர் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து பயில முடியும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment