பாரதியாருக்கு காவி நிறத்தில் தலைப்பாகை பிளஸ்-2 தமிழ் பாடப்புத்தக அட்டையால் புதிய சர்ச்சை

பிளஸ்-2 தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் இடம் பெற்றுள்ள பாரதியாரின் உருவப்படத்தில் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் கடந்த 3-ந் தேதி திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்புக்கான (பிளஸ்-2) தமிழ் பாடப்புத்தகமும் அடங்கும். அந்த புத்தகத்தின் அட்டையில் மகாகவி பாரதியாரின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. பாரதியார் என்ற உடன் அவரது தோற்றம் அனைவருக்கும் நினைவுக்கு வரும், குறிப்பாக அவரறு முறுக்கு மீசை, வெள்ளை நிற தலைப்பாகை, கருப்பு நிற கோட்டு நினைவுக்கு வரும். ஆனால் இந்த பிளஸ்-2 தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் பாரதியாரின் தலைப்பாகை, வெள்ளை நிறத்துக்கு பதிலாக காவி நிறத்தில் அமைந்திருப்பது வழக்கத்துக்கு மாறாக அமைந்துள்ளது. சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. பாரதியாரின் இந்த உருவப்படத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. “நாங்கள் இவ்வளவு காலம் பாடம் நடத்தி வருகி றோம். பாரதியாரின் தலைப்பாகை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தில் அவருடைய தலைப்பாகையை காவி நிறத்தில் வரைந்து இருக்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று தமிழ் ஆசிரியர்கள் குமுறுகிறார்கள். இது அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்கும் வழி வகுத்துள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “பாரதியாரின் வெள்ளை தலைப்பாகைக்கு பதில், காவி நிற தலைப்பாகை வரைந்து இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இது இயல்பாக நடந்ததாக தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்து இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். பா.வளர்மதி விளக்கம் இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதியிடம் கேட்டபோது அவர், “மாநில அரசு இந்த பாடப்புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. கல்வியில் அரசியல், மதம் என்ற கேள்விக்கு இடம் இல்லை. இது அறியாமல் நடந்த தவறு. அந்த தவறு உறுதியானால், அது சரிசெய்யப்படும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment