ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வும் கடினம் இரண்டு மாதத்தில் முடிவுகளை வெளியிட திட்டம்

ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இரு மாதத்தில் முடிவுகளை வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு டெட் தேர்வுக்கு 6.4 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து டெட் முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. 1.62 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1,081 மையங்களில் டெட் 2-ம் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வை 4.2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 2-ம் தாள் தேர்வும் கடினமாக இருந்ததாகவும், கணிதம், உளவியல், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மறைமுக கேள்விகள் அதிகம் இடம்பெற்றதாகவும் தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விடைத்தாள்களைத் திருத்தி 2 மாதங்களில் முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment