தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழ்நாடு சுகாதார திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. தமிழ்நாடு சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டம் ஒன்றை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றா நோய்களின் சுமையை குறைத்தல், தாய்மைப்பேறு, குழந்தைகள் மருத்துவ சேவையை மேம்படுத்துதல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். இந்த திட்டத்தை அமல்படுத்த உலக வங்கி 28 கோடியே 70 லட்சம் டாலர் (ரூ.2,009 கோடி) கடன் வழங்குகிறது. இதற்காக, உலக வங்கி, மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையே நேற்று டெல்லியில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அரசு சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உலக வங்கி சார்பில் அதன் இந்திய இடைக்கால இயக்குனர் ஹிஷாம் அப்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், சமீர் குமார் காரே பேசுகையில், “சுகாதார சேவைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படி என்பதில் தமிழ்நாடு முன்னுதாரண மாநிலமாக செயல்பட வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களுக்கு பாடம் நடத்தவும் முடியும். இந்த பயணத்தில் தமிழ்நாட்டுக்கு உலக வங்கி உதவுவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்” என்றார். சுகாதார முன்னேற்றம் தொடர்பான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு விகிதம், ஒரு லட்சத்துக்கு 90 பேர் என்பதில் இருந்து ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதுபோல், பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஆயிரம் பேருக்கு 30 என்பதில் இருந்து ஆயிரம் பேருக்கு 20 ஆக குறைந்துள்ளது.

No comments:

Post a Comment