அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும், சகோதரன் தொண்டு நிறுவனமும் இணைந்து மூன்றாம் பாலின குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தடுக்கும் பொருட்டும் ‘நண்பனாய் இரு, துன்புறுத்துபவனாய் இருக்காதே’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, ஆய்வறிக்கையை வெளியிட்டார். யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குனர் எரிக் பல்ட், பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- 70 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) தொடங்கிவைக்கிறார். மாணவர்களின் அனைத்து தகவல்களையும் அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு சிறுவயதிலேயே நற்பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும், உடல்நலம் பேணிகாப்பதற்கும், ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும் வாரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பின்னர் அவர்கள் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை சிறப்பு வகுப்புகள் மூலம் கற்றுத்தருவார்கள். தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளில் மின்னணு நூலகம் கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. பிளஸ்-2 பாடத்திட்டம் மத்திய அரசின் போட்டி தேர்வுகளை சந்திக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிக விரைவில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே உள்ள இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்தியே தற்போது மாணவர்கள் பயணிக்கலாம். எல்லா பள்ளிகளுக்கும் புத்தகங்கள் சரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்பதற்கு பதிலாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பலர் சேர்ந்து படிக்கிறார்கள். என்ஜினீயரிங் படிப்பில் மாணவர்கள் சேராததற்கு வேலைவாய்ப்பின்மையும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment