காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் உதவி ஆணையர், ஆய்வாளருக்கு தலா ரூ.2.50 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆணையர் வெள்ளதுரை மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் புல்லா கோட்டை சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ். இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை கரிமேடு காவல் நிலைய போலீஸார் சுரேஷை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், மறுநாள் உடலில் காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், பின்னர் உயிரிழந்தார். இதுகுறித்து சுரேஷின் தந்தை முனியாண்டி, விசாரணை என்ற பெயரில் எனது மகனை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டனர். இதற்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயசந்திரன் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, "சுரேஷை பிடித்துச் சென்ற காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த விவேகானந்தன் மற்றும் உதவி ஆணையர் வெள்ளதுரை ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.5 லட்சம் தொகையை சுரேஷின் தந்தை முனியாண்டியிடம் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை வெள்ளதுரை மற்றும் விவேகானந்தனின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் தமிழக அரசு பிடித்துக் கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment