24 கேள்விகளுக்கான விடைகள் தவறு: குரூப் 1 தேர்வு குளறுபடிகளை ஏற்க முடியாது டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

TNPSC குரூப் 1 தேர்வில் நடந்துள்ள குளறுபடிகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் எஸ்.விக்னேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மார்ச் மாதம் குரூப் 1 முதல்நிலைத்தேர்வை நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் பேர் எழுதினர். நானும் இத்தேர்வை எழுதினேன். இத்தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியல் தேர்வு முடிந்த சில தினங்களில் வெளியிடப்பட்டது. கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில், 18 கேள்விகளுக்கான பதில்களில் தவறு இருந்ததால் நான் உள்பட பலர் அதை சுட்டிக்காட்டி திருத்திய விடைப்பட்டியலை வெளியிடக் கோரினோம். ஆனால் எங்களது கோரிக்கையை டி.என்.பி.எஸ்.சி., கண்டுகொள்ளாமல், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை கடந்த ஏப்ரல் 3-ந்தேதி வெளியிட்டு விட்டது. மேலும் குரூப் 1 பிரதானத் தேர்வையும் வரும் ஜூலை மாதம் நடத்தவுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி. திருத்திய விடைப்பட்டியலை வெளியிட்டு இருந்தால் 175.5 மதிப்பெண் பெற்ற எனக்கு 195 மதிப்பெண் கிடைத்து இருக்கும். எனவே முதல்நிலைத்தேர்வுக்கான திருத்திய விடைப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை குரூப் 1 பிரதானத் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி வி.பார்த்திபன் நேற்று விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘குரூப் 1 முதல்நிலைத்தேர்வில் 18 கேள்விகளுக்கான பதில்களில் தவறு இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளோம். அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக நிபுணர்கள் குழுவை அமைத்து அந்த கேள்விகளுக்கான சரியான பதில் எது என்பதை மீண்டும் திருத்திய விடைப்பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் அவ்வாறு செய்யவில்லை. எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் முதல்நிலைத்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது’ என்று வாதிட்டார். அப்போது டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகளுக்கான விடைகளில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சரியாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து நீதிபதி, ‘குரூப் 1 முதல்நிலைத்தேர்வின் கேள்வி தாளை பார்க்கும்போது, அங்கு தேவையில்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வு இளைஞர்களின் கனவாக உள்ளது. இதுபோன்ற முக்கியமான தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறுகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் எந்த அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது?’ என்று கண்டனம் தெரிவித்தார். பின்னர், குரூப் 1 பிரதானத்தேர்வுக்கு தடை கேட்கும் மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment