திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 21 ஆயிரத்து 767 பேர் எழுதுகிறார்கள் கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 21 ஆயிரத்து 767 பேர் எழுத உள்ளனர் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வு 2019-க்கான மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் தாள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தாள் தேர்வுக்கு 23 மையங்கள் மற்றும் 2-ம் தாள் தேர்வுக்கு 32 தேர்வு மையங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வை 8 ஆயிரத்து 784 பேரும், 2-ம் தாள்தேர்வை 12 ஆயிரத்து 983 பேரும் எழுத உள்ளனர். அவர்களில் முதல் தாளை 174 மாற்றுத்திறனாளிகளும், 14 பார்வை குறைபாடு உயைவர்களும், 2-ம் தாளை 255 மாற்றுத்திறனாளிகளும் 81 பார்வை குறைபாடு உடையவர்களும் எழுத உள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையம், கல்வி மாவட்ட தலைமையிடமான திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலகம், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலகம், ஆவடி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் எழுத்து தேர்வுக்காக முதல் தாள் 23 மையங்கள், இரண்டாம் தாள் 32 தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் 32 பேர், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் 32 பேர், துறை அலுவலர்கள் 32 பேர், கூடுதல் துறை அலுவலர்கள் 32 பேர் என மொத்தம் 128 பேர் முதன்மை கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்பட்டு ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்கள் முதல் தாள் 440 பேர், இரண்டாம் தாளுக்கு 650 பேர் மாவட்ட கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உடைய தேர்வருக்கு சொல்வதை எழுதுவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்கள் நிகழாதவண்ணம் கண்காணிக்க தேசிய மாணவர் படை ஆசிரியர், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கொண்ட குழுவில் முதல் தாளுக்கு 46 பேர், 2-ம் தாளுக்கு 64 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment