ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் தயாரிக்க புதிய மென்பொருள் ஆகஸ்ட் 1 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியலை ஆகஸ்ட் 1 முதல் ஐஎப்எச்ஆர்எம்எஸ் என்ற புதிய மென்பொருள் மூலம் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று கருவூலத் துறை உத்தரவிட் டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதியம், ஒப்பந்த பணியாளர்கள் என 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான சம்பளப் பட்டியல் மற்றும் துறை சார்ந்த செலவினங்களுக்கான ரசீதுகள் ஏடிபிபிஎஸ், வெப் பே ரோல் ஆகிய மென்பொருள் மூலம் தற்போது தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் சம்பளப் பட்டியல்களைப் பதிவேற்றும்போது குளறுபடிகள் ஏற்படுவதுடன், அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. இதனால் சம்பளம் வழங்குவதில் சில நேரங் களில் காலதாமதமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், ஊழியர்களின் சம்பளப் பட்டியல் மற்றும் இதர செலவின விவரங்களை ஐஎப்எச்ஆர்எம்எஸ் என்ற புதிய மென்பொருள் மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பயன்பாட்டில் உள்ள பழைய மென்பொருள் மூலம் அனுப்பும் நடைமுறை வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென் பொருளில் மட்டுமே அனைத்து செலவினப் பட்டியல்களையும் தயாரித்து அனுப்ப வேண்டும். பழைய மென்பொருள் மூலமான பட்டியல்கள் ஏற்கப்படாது என்று கருவூலத் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment