அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கவுன்சிலிங் குழு (எம்.சி.சி.) அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பு இடங்களில் 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு போக, மீதமுள்ள 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரத்து 250 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கிறது. இந்த அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்போது? இடம் ஒதுக்கீடு செய்வது எப்போது? என்பது குறித்து மருத்துவ கவுன்சிலிங் குழுவின் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில், முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 19-ந்தேதி (புதன்கிழமை) முதல் 24-ந்தேதி வரை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் எந்த கல்லூரியில் சேருகிறார் என்பதை விண்ணப்பதாரர் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர், 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியை விண்ணப்பதாரர் உறுதி செய்ய வேண்டும். 26-ந்தேதி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 27-ந்தேதி முடிவு வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதிக்குள் எந்த கல்லூரியில் இடம் கிடைத்ததோ? அங்கு சேர்ந்துவிட வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். 9-ந்தேதி தேர்வு செய்த கல்லூரியை உறுதி செய்ய வேண்டும். 10-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 12-ந்தேதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின்னர், 13-ந்தேதி முதல் 22-ந்தேதிக்குள் இடம் கிடைத்த கல்லூரியில் சேர வேண்டும். மத்திய பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகம், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்குமான கலந்தாய்வுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். 16-ந்தேதி தேர்வு செய்த கல்லூரியை உறுதி செய்திட வேண்டும். 17-ந்தேதி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18-ந்தேதி முடிவுகள் வெளியிடப்படும். 20-ந்தேதி முதல் 26-ந்தேதிக்குள் இடம் கிடைத்த கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும்.

No comments:

Post a Comment