உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு குடிநீர், கழிவறைகளில் தண்ணீர் பஞ்சத்தால் மாணவர்கள் பாதிப்பு

பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. மறுபுறம் வெயிலுடன், தண்ணீர் தட்டுப் பாடும் வாட்டுவதால் மாணவர் கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக ஆசிரியர்கள், பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் படி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய் யப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நடப்பு ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும் போது, ‘‘புதிய பாடத்திட்ட மாற்றம் வரவேற்கக்கூடியது. எனினும், அரசு முறையாக திட்டமிடாததால் 60 சதவீத அரசுப்பள்ளிகளுக்கு இன்னும் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு ஒரு சில புத்தகங்களே வந்துள்ளன. இதனால் பல பள்ளிகளில் புத்த கங்களை நகல் எடுத்து ஆசிரியர் கள் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டமும் கடினமாக இருப்பதால் மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்ள பெரிதும் சிரமப்படுகின் றனர். இதேபோல், கடந்த ஆண்டும் பிளஸ் 1 வகுப்பில் முக்கிய பாடப்புத்தகங்கள் காலாண்டு வரை தரப்படவில்லை. அதன் விளைவு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டும் அதே தவறை கல்வித்துறை மீண்டும் செய்வது ஏற்புடையதல்ல. எனவே, புதிய பாடப்புத்தகங்களை விரைவாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியது: பாடத்திட்ட மாற்றத்தை 3 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. அதன்பின் நடப்பு கல்வியாண்டில் (2019-20) 2, 7, 10, 12-ம் வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டில் (2020-21) 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். ஆனால், முன்கூட்டியே பணி கள் முடிந்துவிட்டதால் எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய அனைத்து வகுப்புகளுக்கு நடப்பாண்டு பாடத்திட்டத்தை மாற்ற போவதாக திடீரென அறிவித்து அதை அமல்படுத்தியது. இங்குதான் சிக்கல் உருவானது. ஏனெனில், பாடத்திட்ட பணிகள் இறுதிக்கட்ட நிலையில் இருந்த போதுதான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் 3, 4, 5, 8-ம் வகுப்புக்கான புத்தகங்கள் முழுமையாக பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை. சில பள்ளிகளுக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் வழங்கப் பட்டுள்ளன. இதேபோல், இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கு முப்பருவ பாட முறையை ரத்து செய்துவிட்டு ஒரே பாடப்புத்தக முறையை அரசு அறிமுகப்படுத்தியது. அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களும் சரியாகக் கிடைக்கவில்லை. மேலும் ஒரே பாடப் புத்தகங்கள் என்பதால் அவற்றின் எடை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. ஏற்கெனவே உள்ள நோட்டுப் புத்தகங்களுடன் இவற்றையும் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் அவலத்துக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர். மேலும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல், 7-ம் வகுப்பு அறிவியல் (ஆங்கில மீடியம்) புத்தகங்களும் வழங்கப்படவில்லை. எல்லா புத்தகங்களும் இணையதளத்தில் உள்ளன. நகல் எடுத்து வகுப்புகளை நடத்துங்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அதேநேரம் இணையதளத்திலும் புத்தகங்கள் பதிவேற்றப்படவில்லை. மாணவர் கள் கையில் புத்தகங்கள் இல்லாமல் பாடம் நடத்துவதில் பலனில்லை. வசதியான மாணவர்கள் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். வசதியற்றவர்கள் நிலை குறித்து சிந்திக்க வேண் டும். இதனால் பள்ளிகள் திறந்தாலும் பெரிதாக ஒரு பயனும் இல்லை. அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதவிர தண்ணீர் தட்டுப்பாடும் மிரட்டுகிறது. வீடுகளில் இருந்து மாணவர்களை குடிநீர் எடுத்து வர சொல்லி விடுகிறோம். ஆனால், கழிப்பறை உட்பட இதர தேவைகளுக்கான தண்ணீருக்கு சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக வட மாவட்ட பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பல பள்ளிகளில் கழிப்பறைகளை பூட்டி வைப்பதால் மாணவர்கள் திறந்தவெளிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சினையை சரி செய்து கொள்ள அரசு கூறுகிறது. ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதுமான நிதி இல்லை. தண்ணீர் பிரச்சினையால் கல்விப்பணியும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெயில் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment