மணிக்கு 1,200 கி.மீ. வேகம் செல்லும் அதிவேக வாகனம் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி சாதனை

அமெரிக்காவில் நடைபெறும் போட்டிக்காக மணிக்கு 1,200 கி.மீ. வேகம் செல்லும் அதிவேக வாகன மாதிரியை உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கான போக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி, அடுத்த மாதம் 21-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு உலகம் முழுவதும் இருந்து 1,600 குழுக்கள் விண்ணப்பித்தன. அதில் 52 குழுக்களின் வடிவமைப்புகள் (டிசைன்கள்) போட்டிக்கு அங்கீகரிக்கப்பட்டன. 21 குழுக்களை போட்டியில் கலந்துகொள்வதற்காக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அழைத்துள்ளது. அதில் ஆசியா கண்டத்தில் இருந்து இடம்பெறக்கூடிய ஒரே குழு, சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த அவிஷ்கார் ஹைபர்லூப் குழு ஆகும். மாணவர் சுயர்ஷ் தலைமையில் 30 பேர் ஒன்றிணைந்து, கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து, அதிவேக வாகன மாதிரி வடிவமைப்பை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பத்துடன்கூடிய இந்த வாகனம் எப்படி இயங்கும், இந்த வாகனத்தால் அடுத்த தலைமுறையினர் என்ன பலன் அடைய முடியும் என்பது குறித்து மாணவர்கள் குழுவினர், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் (பொறுப்பு) சிவக்குமார், ‘ஏரோ ஸ்பேஸ்’ துறையின் பேராசிரியர் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர் ஐ.ஐ.டி. வளாகத்தில் கூட்டாக நிருபர்களிடம் விளக்கினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- அடுத்த தலைமுறையினர் பலன்பெறத்தக்கதும், அதிநவீனமானதும், வேகமானதுமான ஒரு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த வாகன மாதிரியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த வாகனம் ரெயில், பஸ், விமானத்தை விட வேகமாக செல்லக்கூடியது. ஒரு கார் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதேபோல், விமானம் 800 முதல் 850 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால் இப்போது நாங்கள் உருவாக்கி இருக்கும் வாகனம் மணிக்கு 1,000 முதல் 1,200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆனால் இதற்கென்று தனிப்பாதை அமைக்க வேண்டும். இலகு ரக தூண் அமைத்து, அதில் பெரிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்கி, அதனுள் இந்த வாகனம் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகன பயணம் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். 15 மீட்டர் நீளம் கொண்ட பஸ் வடிவில் இந்த வாகனத்தை வடிவமைக்க முடியும். இதில் 40 பேர் பயணிக்கலாம். உதாரணமாக, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மேற்சொன்ன வழித்தடம் மூலம் இந்த அதிநவீன வாகனத்தில் அரைமணி நேரத்தில் செல்ல முடியும். ஒருவருக்கு டிக்கெட் கட்டணம் என்பது ரூ.1,500 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. விமானத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இது வேகமாக செல்லக்கூடியது. கட்டணம் மிக குறைவு. எரிபொருள் செலவு மிச்சமாகிறது. அதைத்தான் அடுத்த தலைமுறையினருக்கு வழங்க இருக்கிறோம். இதை நடைமுறைப்படுத்தி, இயக்குவதற்கு செலவு அதிகம் பிடிக்கும். ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மராட்டிய மாநில அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகிறது. முக்கியமாக எங்களுடைய இந்த முயற்சியை மத்திய அரசு கேள்விப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதுகுறித்த தகவல்களை கேட்டுப் பெற்று இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment