தமிழகத்தில் 11 நகரங்களில் 100 டிகிரி வெயில் 7 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் நேற்று 11 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை விட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. 7 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை அரபிக் கடலில் பரவி வருகிறது. அதன் காரணமாக தென்மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகம் நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செமீ, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 106 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, கடலூரில் 104 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று வீசுவதாலும் தமிழகத்தில் படிப்படியாக வெயில் குறையும். நேற்று முன்தினம் 16 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில் நேற்று 11 இடங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment