தமிழகம் முழுவதும் 1,081 மையங்களில் 2-வது நாளாக ஆசிரியர் தகுதி தேர்வு 4 லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் 1,081 மையங்களில் ஆசிரியர் தகுதி 2-ம் தாள் தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் எழுதினார்கள். மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தின் படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்துகிறது. முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. இந்த தேர்வை 1¾ லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் தகுதி 2-ம் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் 1,081 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 60 மையங்களில் நடந்து இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. பெரும்பாலான தேர்வர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக தங்களுடைய குழந்தைகளை கொஞ்சி முடித்து, ‘தேர்வு எழுதிவிட்டு வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும்’ என்ற அன்பு கட்டளையிட்டபடி தேர்வு அறைக்குள் சென்றனர். சில குழந்தைகள் தாய் தேர்வு எழுத செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அழுதபடி, பாசப் போராட்டம் நடத்தியதையும் பார்க்க முடிந்தது. அந்த குழந்தைகளின் தந்தையினர் அவர்களை சமாதானப் படுத்தி அழைத்து வந்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்களில் பலர் 2-ம் தாள் சற்று கடினமாக இருந்ததாகவே தெரிவித்தனர். மேலும், பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்ட புத்தகங்களை சற்று ஆழமாக படித்து இருந்தால், நல்ல மதிப்பெண் எடுத்து இருக்க முடியும் என்று தெரிவித்தனர். தமிழ் பாடப்பிரிவு மட்டுமே எளிதாக இருந்ததாக தெரிவித்த தேர்வர்கள், ஆங்கிலம், கணிதம், உளவியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்பட்டு இருந்த பல வினாக்கள் நன்கு படித்தவர்களால் மட்டுமே பதில் அளிக்க முடியும் என்று கூறினர்.

No comments:

Post a Comment