10 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) அனல் காற்று வீசும் எனவும், மாநிலத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 8-ந் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட தாமதமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கு முன் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, புயலாக மாறியது. ‘வாயு’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல், குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) கரையை கடக்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- அரபிக்கடலில் உருவான வாயு புயல், குஜராத் அருகே நாளை (இன்று) பிற்பகலுக்குள் கரையை கடந்துவிடும். தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி, தேனி, நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, வேலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) அனல் காற்று வீசும். அதேபோல், உள்மாவட்டங்களிலும் 2 டிகிரி வெயில் அதிகமாக பதிவாகும். இந்த 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் தமிழகத்தில் குறையும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தேவலாவில் 10 செ.மீ., ஜி.பஜாரில் 7 செ.மீ., வால்பாறையில் 6 செ.மீ., சின்னக்கலாறு, குளச்சலில் தலா 4 செ.மீ., நாகர்கோவில், நடுவட்டம், ஊட்டியில் தலா 3 செ.மீ., தக்கலை, இரணியல், குழித்துறை, பெரியார், பூதப்பாண்டியில் தலா 2 செ.மீ. என்ற அளவில் மழை பெய்து இருக்கிறது.

No comments:

Post a Comment