உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

குரூப்-1 தேர்வில் தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் ஐகோர்ட்டில், டி.என்.பி.எஸ்.சி. பதில் மனு

குரூப்-1 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதில் மனுதாக்கல் செய்தது. சென்னை ஐகோர்ட்டில், எஸ்.விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மார்ச் மாதம் குரூப்-1 முதல்நிலை தேர்வை நடத்தியது. இந்த தேர்வை நான் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினோம். இத்தேர்வுக்கான மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில், கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில், 18 கேள்விகளுக்கான விடைகள் தவறாக இருந்தன. இதை சுட்டிக்காட்டி திருத்திய மாதிரி விடைத்தாளை வெளியிட கேட்டோம். ஆனால், அதை ஏற்காமல், டி.என்.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகளை ஏப்ரல் 3-ந்தேதி வெளியிட்டது. மேலும் முதன்மை தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. திருத்திய மாதிரி விடைத்தாளை வெளியிட்டு இருந்தால், 175.5 மதிப்பெண் பெற்ற எனக்கு 190 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைத்திருக்கும். எனவே முதல்நிலை தேர்வுக்கான திருத்திய மாதிரி விடைத்தாளை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை முதன்மை தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், “குரூப்-1 தேர்வில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செய்துள்ள குளறுபடியை ஏற்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 6 மதிப்பெண்கள் அதில், “மாதிரி விடைத்தாளில் பல கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக 4 ஆயிரத்து 390 விண்ணப்பதாரர்கள் புகார் அளித்தனர். அதன்படி, 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், கேள்விகளுக்கான விடைகளில் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே தவறான கேள்விகளுக்கு பதில் அளித்த மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நிபுணர் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட முடியாது” என்று கூறப்பட்டு இருந்தது. பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை (புதன்கிழமை) தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment