அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை அந்தந்த மாவட்டங்களில் பட்டியல்கள் தயாராகிறது

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அந்தந்த மாவட்டங்களில் பட்டியல்கள் தயாராகிறது. அங்கீகாரம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 பிரிவு 18(1)-ன் படி அனைத்து வகை பள்ளிகளும் பள்ளிக்கல்வி துறையின் தடையின்மை சான்றும், அங்கீகாரமும் பெற்று இருக்க வேண்டும். தடையின்மை சான்றும், அங்கீகாரமும் இன்றி எந்த பள்ளிகளும் செயல்படக்கூடாது. அதன்படி, நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்து 915 பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து இருந்தன. மீதம் உள்ள பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் முறையாக தடையின்மை சான்றும், அங்கீகாரமும் பெற விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அறிவுறுத்தியது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் தடையின்மை சான்று, அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பி இருக்கிறது. உரிய நடவடிக்கை திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தடையின்மை சான்று, அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளாக 25 பள்ளிகள் இருக்கின்றன என்று மாவட்ட நிர்வாகம் பட்டியலை தயார் செய்து அனுப்பி உள்ளது. இதுபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. மாநிலம் முழுவதும் எவ்வளவு பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றன? என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) தெரியவரும். அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் நுழைவுவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்படும். இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையினை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று ஒட்டப்படும். மேலும் தொடர்ந்து அந்த பள்ளிகள் செயல்படும் பட்சத்தில் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பள்ளிகளுக்கு எச்சரிக்கையும் விட இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment