போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது தமிழக அரசு திட்டவட்டம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டியது. முதல்-அமைச்சர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியதன் விளைவாகவும், மாணவர்கள் நலன் கருதியும் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்காலிக வாபஸ் பெற்றனர்.ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் முதுகலை ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு பெற இருக்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.அதில், போராட்டத்தில் ஈடுபட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற கூடாது என்ற வார்த்தை முக்கியமாக இடம் பெற்று இருந்தது.அந்த வகையில் பார்க்கும் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று துறை ரீதியான நடவடிக்கைக்குள்ளான ஆசிரியர்களுக்கு இந்த பதவி உயர்வில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இதேபோல், வேறு சில பதவி உயர்வுகளும் வர இருக்கின்றன. அதற்கும் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறுகையில், “துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் மாதம் இறுதிக்குள் நடைபெற இருக்கிறது. அதற்குள் துறைரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்காக வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள் ஆகியோரை சந்தித்து முறையிட இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment