ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பெறுவதில் சிக்கல்?

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை ஆன்லைனில் தரவிறக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) கட்டாயமாகும். இந்தத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரண்டு தாள்களுக்கும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கடந்த http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் பல மாவட்டங்களில் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய தேர்வர்கள் ஓரிரு நாள்கள் காத்திருந்தனர். விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டு நான்கு நாள்கள் ஆகியும், அதைத் தரவிறக்கம் செய்வதில் சிக்கல் நீடிப்பாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த தேர்வர்கள் டி.சுகுமார், கே.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கூறுகையில், விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட பயனியர் குறியீடு (யூசர் நேம்) மற்றும் கடவுச் சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்தும் கூட டேஸ் போர்டு வெளிப்படவில்லை. சில நேரங்களில் நேரம் கடந்து விட்டது (டைம் அவுட்) என காண்பிக்கிறது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உதவி மையத்தை தொடர்பு கொண்டால் எந்நேரமும் பிஸியாகவே உள்ளது. இந்தப் பிரச்னைக்கு சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம். எனவே அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: ஆசிரியர் தேர்வு வாரிய சர்வரில் எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது பிரௌசிங் மையங்களில் தவறான தகவல்களை கொடுத்து விடுகின்றனர். அதே வேளையில் பயனியர் குறியீடு, கடவுச்சொல் போன்றவற்றை பதிவு செய்வதிலும் தவறிழைக்கின்றனர். பல மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் தரவிறக்கம் செய்து வருகின்றனர். இதுவரை தரவிறக்கம் செய்ய முடியாத தேர்வர்கள், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை 044 - 28272455, 7373008144, 7373008134 என்ற தொலைபேசி எண்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில், தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே அனைத்து தேர்வர்களும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment