டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

லாபநோக்கத்துடன் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 'டியூசன்' எடுப்பது சட்டவிரோதம் என்றும், அவ்வாறு டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல் கோவை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன், அருகில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இடமாற்றம் என்பது பணி விதிகளில் ஒரு நிபந்தனை. அரசு ஊழியர்கள் எங்கு இடமாறுதல் செய்யப்பட்டாலும், அங்கு சென்று பணியாற்ற வேண்டும். அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். 'டியூசன்' சட்டவிரோதம் மேலும், அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் லாபநோக்கில் 'டியூசன்' எடுப்பது என்பது பணி விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். அவ்வாறு மாணவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு டியூசன் எடுப்பதும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே, 'டியூசன்' மற்றும் 'டுட்டோரியலில்' அரசு பள்ளி ஆசிரியர் பணத்துக்காக பாடம் நடத்துவதும் சட்டவிரோதம். எனவே, 'டியூசன்' எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து அவர்கள் மீது அரசு கடும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுமட்டுமல்ல அரசை மிரட்டும் தொணியில் மாணவ சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும் கருணை காட்டக்கூடாது. ஆசிரியர்கள் நேர்மையுடனும், மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழவேண்டும். தொலைபேசி எண் ஆனால், அண்மை காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சமூக ஒழுங்கின்மை பெருகிவிட்டது. பாலியல் வன்கொடுமைகள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. எனவே, இதுதொடர்பாக மாணவியர், பெற்றோர் மற்றும் நலம்விரும்பிகள் புகார் செய்ய ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக கல்வித்துறை 8 வாரத்துக்குள் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த இலவச தொலைபேசி எண் குறித்து அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும். குறிப்பாக கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இந்த இலவச தொலைபேசி எண்ணை இடம்பெறச்செய்ய வேண்டும். நடவடிக்கை ஏராளமான பாலியல் கொடுமை சம்பவங்கள் நடந்தாலும், வெளியில் தெரியும் சம்பவங்கள் மீது மட்டுமே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற பாலியல் சம்பவங்கள், எல்லாம் ஏதோ ஒரு வழியில் தீர்க்கப்பட்டு விடுகிறது. எனவே, பாலியல் கொடுமை தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'டியூசன்' நடத்தும் ஆசிரியர்கள் குறித்தும் இந்த இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதேபோல இந்த மனுவை தாக்கல் செய்த தலைமை ஆசிரியரான ரங்கநாதன் மற்றும் மற்றொரு தலைமை ஆசிரியரான மல்லிகா ஆகியோர் தங்களது பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment