Saturday, 5 August 2017

சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரம்: மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்


சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரம்: மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம் | மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு தடை விதிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, சலுகை மதிப்பெண் வழங்கும் நடை முறையை அடுத்த ஆண்டு தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து விசாரிக்க செப்டம்பர் 4-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான (மருத்துவ மேற்படிப்பு) மாணவர் சேர்க்கையில், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9-ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது. இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறி இருந்தது. மேலும், அரசாணையின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் வெளியிட்டது. இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்தது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாணவர்களும் இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த ஜூலை 6-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது அப்போது, முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு வெளியிட்ட தகுதி பட்டியலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்வது, 'நீட்' தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் இடைக்கால தடை விதிப்பது போன்ற செயல்பாடுகளை ஐகோர்ட்டுகள் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், இது மாணவர்கள் சேர்க்கையில் தேவையற்ற சிக்கலை உண்டாக்குகிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் கூறியதாவது:- மதுரையில் அலங்காநல்லூர், சென்னை சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர்களை கூட கிராமப்புறங்களில் பணி புரிந்தவர்களாக குறிப்பிட்டு அவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு 50 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. இது போன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் தவறாக மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வாகி உள்ளனர். இதனால் எங்களை போன்ற நகர்ப்புற மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்திருக்கிறோம். எனவே இந்த நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்ட தகுதிப்பட்டியலையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில், இது பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்றும், இதனை ரத்து செய்தால் கிராமப்புறங்களில் பணியாற்ற மாணவர்கள் முன்வர மாட்டார்கள் என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போது இந்த ஆண்டில் நடந்து முடிந்துள்ள மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும், அடுத்த ஆண்டு இந்த நடைமுறை தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து விசாரிப்பதற்காக வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.