Wednesday, 19 April 2017

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6 ஆயிரத்து 390 காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறோம். தேர்வு நடக்கும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் போன்றவை முடிவு செய்யப்பட்டுவிட்டன. எல்லாமே வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் இப்படி அனைத்துமே ஒரே நேரத்தில் முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டு இருப்பது தமிழகத்தில் இதுதான் முதன்முறையாகும். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் அடங்கிய விவரங்கள் அட்டவணை வெளியிடப்படுகிறது. எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்பதும் தெரிவிக்கப்படுகிறது. இனி எதிர்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங் கள் அனைத்தும் இணைய வழியான ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில தேர்வுகளுக்கு கணினி வழித் தேர்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் முறையில் சில குழப்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்துக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதில் என்ன செய்ய முடியும் என்பதை அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. பள்ளிக் கல்வியில் உள்ள பாடத்திட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது தெரிவிப்பேன். சிறந்த கல்வியாளர்களை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. விமர்சனங்கள் வராத அளவுக்கு செயல்படுத்துவதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக அது இருக்கும். நீட் தேர்வுகள் குறித்து தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது. அதை மத்திய அரசுதான் தீர்க்கவேண்டும். மீண்டும் அதுபற்றி முதல்-அமைச்சர் வலியுறுத்த இருக்கிறார். நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்று கேட்டால், அடுத்த ஆண்டு அதற்கான நிலைகளை அரசு பரிசீலிக்கும். அடுத்த ஆண்டு அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பதுபற்றி நாங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தேர்வுகளின்போது மாணவர்களை எப்படி தயார்படுத்துவது என்பதை பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. டெட் பரீட்சைகளை வேறு தேதிக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அவை கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சட்டப்படி நடவடிக்கை கொடுங்கையூரில் சி.பி.எஸ்.இ. என்று சொல்லிக்கொண்டு இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றில் மெட்ரிக் சான்றிதழ்கள்தான் தரப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பாக அதிகாரி ஒருவரை அனுப்பியிருக்கிறேன். சி.பி.எஸ்.இ. நிலை கேட்டு அந்தப்பள்ளி விண்ணப்பித்து இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முன்கூட்டி விடுமுறை கோடை வெயில் அதிகம் உள்ளது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வாரம் 21-ந் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து நடக்கிறது. மக்கள் உணர்வுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளுக்கு 22-ந் தேதியில் இருந்து விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் தொடக்கப்பள்ளிகளுக்கு 29-ந் தேதிவரை பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, கோடை வெப்பம் காரணமாக தொடக்கப் பள்ளிக்கூடங் களுக்கும் 22-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை நடக்கும் தேர்வுகள் அதற்கேற்றபடி மாற்றி அமைக்கப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்க இருக்கிறோம். இதில் கலந்துகொள்ள வேண்டுமென்று மாணவர் களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூற இருக்கிறோம். இதற்கான சுற்றறிக்கையை 19-ந் தேதி (இன்று) அனுப்புவோம். அதை மீறி நடந்துகொண்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடந்த வழிகாட்டி ஆலோசனைக் கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கு பெற்றனர். ஒவ்வொரு துறையிலும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.