Friday, 3 February 2017

கிராமப்புற மாணவர்களுக்கு சிரமம்: தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு தேவை இல்லை சட்டசபையில் சட்டமசோதா தாக்கல்

கிராமப்புற மாணவர்களுக்கு சிரமம்: தமிழகத்தில் 'நீட்' தேர்வு தேவை இல்லை சட்டசபையில் சட்டமசோதா தாக்கல் | கிராமப்புற மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவை இல்லை, இப்போதுள்ள நடைமுறையையே தொடருவது என சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், மருத்துவ அறிவியல் இளநிலை (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புகளுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு வகை செய்வதற்கான சட்டமசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அந்த சட்டமசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்கள் சட்டத்தின்படி மேல்நிலைக் கல்வி தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு அளவில் அனைத்து மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பல் மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத்தேர்வை (நீட் தேர்வு) நடத்துவதற்கு இந்திய அரசு, 1956-ம் ஆண்டு இந்திய மருத்துவ மன்ற சட்டத்தில் மற்றும் 1948-ம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கிறது. தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். மேற்சொன்ன தேர்வுக்காக அவர்களை தயார்படுத்திக்கொள்வதற்கு, அவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவதற்கு அவர்களுடைய இருப்பிடம் உள்ள பகுதிகளில் அத்தகைய கற்பிக்கும் மையங்கள் இல்லாமல் இருக்கிறது. போதுமான நிதி வசதியின்றி அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்கிறார்கள். பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ள அனுபவத்தை ஒரே சீரான நுழைவுத்தேர்வு ஏற்படுத்தி இருக்கிறது என்று கருதப்பட்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு பிளஸ்-2 தேர்வு என்பது சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டியதாயுள்ள ஒரு முக்கியமான தேர்வாக உள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரே சீரான நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கிறது. உயர்கல்வி படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு ஏற்பதென்பது அதிகப்படியான சுமையாக இருக்கிறது. மேலும் பாடத்திட்டம், பாடமுறை மற்றும் ஒரே சீரான நுழைவுத்தேர்வு என்பது மத்திய இடைநிலைக்கல்வி குழுமம் (சி.பி.எஸ்.இ.), மேல்நிலைக் கல்வி படிப்பிற்காக வகுத்துறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கிறது. இது தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியத்தால் வகுத்துறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. தமிழ்நாடு மாநிலத்தில் மாணவர்கள் மேற்சொன்ன சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்பிற்கான சேர்க்கைக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்ற கொள்கை முடிவு ஒன்றை அரசு எடுத்துள்ளது. அதன்படி, இந்த நோக்கத்திற்காக சட்டமொன்றை கொண்டு வருவதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த சட்டமசோதாவில், இந்த சட்டத்தின்படியான வகைமுறைகளை விதிகளை மீறி கல்வி நிறுவனம் செயல்பட்டால், அத்தகைய நடவடிக்கைக்காக ரூ.10 லட்சம் அபராதமும், கல்வி நிறுவனத்தின் இணைப்பை திரும்ப பெறுமாறு தொடர்புடைய பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு வகை செய்வதற்கான சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்குரிய சேர்க்கைக்கு ஒரே சீரான நுழைவுத்தேர்வை நடத்துமேயானால், அத்தகைய படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பாக மாநில அரசால் தற்போது பின்பற்றப்பட்டு வரும் திட்டம் மாறக்கூடியதாக இருக்கும். கிராம மக்களுக்கும், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இதர மக்களுக்கும் தரப்படும் தரமான உயர் மருத்துவ சிகிச்சைக்கான நோக்கம் பாதிக்கப்பட்டுவிடும். எனவே மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்குரிய சேர்க்கைக்கான தற்போது உள்ள முறையே தொடர வேண்டும் என்பதன் பொருட்டும், அதற்கான சட்டப்பூர்வ உதவியை அளிப்பதற்குமான நோக்கத்திற்காக அரசு சட்டமொன்றை கொண்டு வருவதாக முடிவு செய்து இருக்கிறது. இந்த சட்டமசோதா அரசின் முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.