Thursday, 6 October 2016

முழு அரசு பல்கலைக்கழகமாக அறிவித்து அண்ணாமலை பல்கலை. கல்லூரியில் கட்டணத்தை குறைக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

முழு அரசு பல்கலைக்கழகமாக அறிவித்து அண்ணாமலை பல்கலை. கல்லூரியில் கட்டணத்தை குறைக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை முழுமையான அரசு பல்கலைக்கழகமாக அறிவித்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அங்கமான ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஒரு நிகர்நிலை நிறுவனம். தமிழக அரசு இயற்றிய கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிகர்நிலை நிறுவனங்கள் வராது. எனவே, அக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க முடியாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஏழைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்கு இத்தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தனியாரிடம் இருந்த அண்ணா மலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதன் துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசால்தான் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அரசு நிறுவனங்களாகவே கருதவேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணமாக மருத்துவப் படிப்புக்கு ரூ.11,500, பல் மருத்துவப் படிப்புக்கு ரூ.10,500 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு ரூ.5.54 லட்சம், பல் மருத்துவப் படிப்புக்கு ரூ.3.40 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட சுமார் 2 மடங்கு அதிகம் என்பதால், அதை குறைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இக்கோரிக்கைக்காக மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தமிழகத்தில் அரசால் 13 பல்கலைக்கழகங்கள், 20 மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பல நூறு கோடியை அரசு செலவிடுகிறது. அத்துடன் ஒப்பிடும்போது, அண்ணாமலை பல்கலை. மற்றும் ராஜா முத்தையா கல்லூரிக்கு செலவிடும் தொகை மிகவும் குறைவு. எனவே, அண்ணாமலை பல் கலைக்கழகத்தை முழுமையான அரசு பல்கலைக்கழகமாக அறிவித்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (கட்டாய நன்கொடைத் தடுப்பு) சட்டத்தில் திருத்தம் செய்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுவது போல, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசு குழுவே கட்டணம் நிர்ணயிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.