Friday, 16 September 2016

தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் என்று நிபுணர் குழுவிடம் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. நிபுணர் குழு 2003-ம் ஆண்டுக்கு மேல் தமிழக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழக அரசு தற்போது அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்-அமைச்சரின் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்த ஷீலா நாயர், உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளி பேராசிரியர் பிரிஜேஷ் சி.புரோகித், உறுப்பினர் செயலாளராக திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சங்கங்களுக்கு அழைப்பு அந்தக் குழுவின் கூட்டம், தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என்றும் அதில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் ஏற்கனவே அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதிகபட்சமாக சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் ஏற்கனவே சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கருத்து கேட்பு அதன்படி, நேற்று நிபுணர் குழுவின் கருத்து கேட்புக்கூட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய 9 சங்கங்கள் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றன. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெ.கணேசன், செயலாளர் கு.வெங்கடேசன், இணைச் செயலாளர்கள் ஞா.மோகனவள்ளி, சு.ஹரிசங்கர், பொருளாளர் பொ.மகேந்திரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர். பழைய திட்டம்தான் வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, ஒரு அரசு ஊழியரின் மறைவுக்குப் பிறகும் அவரது வாரிசுக்கும் உதவித் தொகை வழங்கப்படும். பணிக்கொடை, 50 சதவீத ஓய்வூதியம் போன்றவை தரப்படும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியதாரருக்கும் குறிப்பிட்ட அளவில் ஓய்வூதியம் உயர்த்தப்படும். ஆனால் இந்த பலன்கள் எதுவும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் கிடையாது. எனவே முந்தைய காலகட்டத்தில் இருந்த வேகத்தில் அரசுப் பணிகள் நடப்பதில்லை என்று சில சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நம்பிக்கை இந்த கருத்து கேட்பு கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. சங்கத்தினர் கூறிய கருத்துகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அவை கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும் நிபுணர் குழு உறுதியளித்தது. இந்த வாக்குறுதியை நம்புவதாக பல்வேறு சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர். இன்று மேலும் சில சங்கங்களை அழைத்து நிபுணர் குழு கருத்து கேட்கவுள்ளது.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.